சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ. 330 கோடி செலவில், பிரமாண்ட நீர்த்தேக்கம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன் பேரில் ஆயிரத்து 485 ஏக்கர் நிலப்பரப்பில் நீர் தேக்கம் அமைக்கும் பணிகள் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன. இதற்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
பின்னர் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின்படி, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் நீரை, ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காலபள்ளியில் மதகு அமைத்து கண்ணன்கோட்டைக்கு கொண்டு செல்லவும், அதே போல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடை நீரை கண்ணன்கோட்டை நீர்த் தேக்கத்தில் சேமித்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இப்பணிகளை தலைமைச் செயலாளர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர், 'கடந்த 2013 ஆண்டு தொடங்கப்பட்ட நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நிலஎடுப்பு பிரச்னை காரணமாக, கால தாமதம் ஆனது. மார்ச் இறுதிக்குள் இப்பணிகள் அனைத்தும் நிறைவடையும்' என்றார்.
மேலும், 'அரசு அதிக அளவு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும்' அவர் உறுதிபட தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரியில் அனையோரை பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!