சென்னை மாதவரத்தில் உள்ள குட்கா குடோனில் கடந்த 2016ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுதப்பட்டிருந்தது. குட்கா முறைகேடு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கில் சட்டவிரோதமாக 639 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடந்ததாகக் கூறி அமலாக்கதுறையினர் பல உயர் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். ஏற்கெனவே குட்கா சம்மந்தமாக சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறையினர் குட்கா வழக்கு விசாரணைக்கு முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்திரன், அப்போது மாதவரத்தில் துணை ஆணையராக இருந்த விமலா மற்றும் கூடுதல் ஆணையர் தினகரன் உட்பட 12 அதிகாரிகள் டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்த சம்மனின் அடிப்படையில் அமலாக்க துறை அலுவலகத்தில் துணை ஆணையர் விமலா ஆஜராகினார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: குட்கா வழக்கில் முன்னாள் டிஜிபிக்கு அமலாக்கத்துறை சம்மன்!