தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் கடைகள் இடிக்கப்பட இருப்பதால் 50ஆயிரம் வணிகர்கள் பாதிப்படைகின்றனர். எனவே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்கள் முடிந்த பின்னர் பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மேலும், கடைகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அந்தந்த இடங்களிலேயே வணிகர்களுக்கு கடைகளை வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என கேட்டுள்ளதாக கூறினார்.
பின்னர் பேசிய அவர், குறிப்பாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத பகுதிகளில் வைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் முதல்வரிடம் கேட்டுள்ளதாகவும் இதற்கு முதலமைச்சர், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் அதைப்பற்றி ஏதும் கூற இயலாது என கூறியதாகவும் தெரிவித்தார்.