தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை நடிகர் ரஜினி, தமிழக காங். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் அதிமுக, பாமக, பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அதில், தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் விஜயகாந்தை பாமக ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார், அதிமுக எம்பி ஜெயவர்தன் என கூட்டணி கட்சியினர் வரிசையாக அவரை பார்த்து விட்டு சென்றனர். உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி அலுவலகத்துக்கு வருவதையும் குறைத்து கொண்டார். இதனால் தேர்தல் பரப்புரைக்கு அவர் வருவதில் சந்தேகம் ஏற்பட்டது.
விஜயகாந்த் வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்கு கட்டாயம் வருவார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியிருந்தார். இந்நிலையில் நாளை மாலை 4 மணிக்கு தேமுதிக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையின் 3 தொகுதிகளில் பரப்புரைக்கு வரவுள்ளார் என தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுநாட்களுக்கு பிறகு விஜயகாந்த் வெளியே வந்து, மேடையில் முழங்க உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.