தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று (ஆக.25) தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தனது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வரும் விஜயகாந்த், முன்னதாக சாலி கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தன் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக சரிவர அரசியலில் இயங்காமல் தற்போது ஒதுங்கியுள்ள விஜயகாந்த், சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக முன்னதாகத் தகவல் வெளியானது. மேலும், தொண்டர்கள் யாரும் தனது பிறந்தநாள் அன்று தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்றும் அவர் நேற்று (ஆக.24) வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது குறித்து அவர் பகிர்ந்த பதிவில், “2005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் என்னுடைய பிறந்த நாளை வறுமை ஒழிப்பு நாளாகத்தான் கடைப்பிடித்து வருகிறோம். 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கு' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்காக உதவிகளைச் செய்துவருகிறோம்.
தற்போதுதான் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பெரும் கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் இடர் உள்ளது. எனவே அனைவருடைய நலன் கருதி என்னுடைய பிறந்தநாள் அன்று தொண்டர்கள் யாரும் என்னைச் சந்திக்க வர வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு தங்க பேனா, மகனுக்கு பிரபாகரன் பெயர்: விஜயகாந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!