தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊரடங்கு உத்தரவால் அனைத்து தரப்புமக்களும், தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு அரசு நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கியது. ஆனால் தமிழ்நாடு முழுவதும் மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்கள் இருந்தும் நலவாரியத்தில் அவர்கள் உறுப்பினராக இல்லை என்பதால், நலத்திட்ட உதவிகளை பெறமுடியவில்லை.
நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்க முன்பு கோரிக்கை வைத்தும், அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை. நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத பல தொழில்களை சேர்ந்த அனைவருக்குமே, அரசு உரிய சலுகைகளை வழங்கி, அவர்களுடைய தொழில்கள் நலிவடையாமல் இருக்க கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, நலவாரிய உறுப்பினர்களுக்கு கிடைத்த அரசின் உதவி, இவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஊரடங்கு பிறப்பித்த பின்னர், 49 நாள்களுக்கும் மேலாக திருமணம் உள்ளிட்ட சுபவிழாக்கள், ஆன்மிக வழிபாடுகள், கோயில் கும்பாபிஷேகங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறாததால், வருவாய் இழந்து அவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு கூட இலவச எண்னில் பேசினால் உனடியாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என்று தெரிவித்தது. அதே போல், நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத இந்தப் புகைப்பட கலைஞர்களுக்கும், நிவாரணத்தொகையை அரசு அளித்திருக்கலாம். எனவே இவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்கிடவும், நலவாரியத்தில் உறுப்பினர்களாக்கவும், தொழிலை தொடங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி