சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், சளி, இருமல் மற்றும் தொண்டை வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 18ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த நவ.23ஆம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் கூறப்பட்டது.
அடுத்த சில நாட்களுக்கு பிறகு மியாட் மருத்துவமனை நிர்வாகம் திடீரென வெளியிட்ட அறிக்கையில், "விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். விஜயகாந்த் விரைந்து நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதா வெளியிட்ட வீடியோவில், "மருத்துவமனை நிர்வாகம் கேப்டன் உடல்நலம் குறித்து வெளியிட்டது வழக்கமான அறிக்கை தானே தவிர அதில் பயப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை. கேப்டன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். மருத்துவர்களுடன் செவிலியர்களும், நானும் அவரை நல்ல முறையில் கவனித்து வருகிறோம்.
வெகு விரைவில் தலைவர் அவர்கள் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பி உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்" என்று பேசியிருந்தார். இது அவரது ரசிகர்களை சற்று நிம்மதி அடைய செய்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக பெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே செல்வமணி, நடிகர் சங்கத் தலைவர் நாசர், தயாரிப்பாளர் சிவா ஆகியோர் மியாட் மருத்துவமனைக்கு சென்றனர். விஜயகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பிறகு நடிகர் சங்க தலைவர் நாசர் அளித்த பேட்டியில், "கேப்டன் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அவரைப் பற்றி வரக்கூடிய தகவல் மிகைப்படுத்தப்பட்ட செய்தி.
விஜயகாந்த் மீண்டு வந்து மீண்டும் ரசிகர்களை சந்திப்பார். அவர் மிகவும் இயல்பான உடல் நலத்துடன் உள்ளார். மேலும் அவர் ஐசியூ வார்டில் உள்ளதால் நாங்கள் அவரை பார்க்கவில்லை. விஜயகாந்த் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். மருத்துவ பாதுகாப்பு கருதி அவரை பார்க்க அனுமதிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் விவகாரம்! இறுதி கட்ட வாதம் நிறைவு! டிச.4ல் தீர்ப்பு - உயர்நீதிமன்றம்!