சென்னை: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'VD13' என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இது எஸ்விசியின் 54-வது படம். இயக்குநர் பரசுராம் பெட்லா குடும்ப பொழுதுபோக்கு கதையாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வாசுவர்மா செயல்படுகிறார்.
படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறிய டைட்டில் டீசர் மூலம் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் இன்று (அக்.15) தெரிவித்தனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் தெரிவித்திருப்பதாவது, "உங்களுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்டர்டெயினரை 'கீதா கோவிந்தம்' படம் மூலம் தந்த படக்குழுவிடம் இருந்து, இன்னும் சிறப்பான படத்தை நீங்கள் காண்பீர்கள்.
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ பெயர் ஒரு சிறிய டைட்டில் டீசர் மூலம் அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 18:30 மணிக்கு அறிவிக்கப்படும்" என்றனர். வரும் சங்கராந்தி பண்டிகைக்கு 'VD13' பிரமாண்டமாக வெளியாக உள்ளது. 'கீத கோவிந்தம்' போன்ற சூப்பர் ஹிட் படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் பரசுராம் பெட்லா கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிளாக்பஸ்டர் பிராண்டான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரும் இந்தப் படத்தில் இணைந்திருப்பது, படம் மீதான ஆர்வத்தை உயர்த்தி உள்ளது. மேலும், இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: லியோ வசூலில் பங்கு சம்பந்தமான பேச்சுவார்த்தை நீட்டிப்பு - டிக்கெட் முன்பதிவில் தாமதம்!