சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று(டிச.28) உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாட்டில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என திரண்டு வந்து நேற்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் பிரபல நடிகர் விஜய் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், பிரேமலதா விஜயகாந்துடன் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கூட்ட நெரிசலுக்கு இடையே காரில் ஏற முயன்ற நடிகர் விஜய் மீது அடையாளம் தெரியாத நபர் யாரோ ஒருவர் செருப்பு வீச முயன்றார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், செருப்பு ஒன்று விஜயை நோக்கி வருவது போன்றும், ஆனால் அதனை விஜயின் பாதுகாப்புக்காக கருப்பு உடையில் இருந்த நபர் ஒருவர் தட்டி விடுவது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜயின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்... அஞ்சலி செலுத்த கண்ணீருடன் குவியும் பொதுமக்கள்..!