சென்னை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை ராஜ்பவனிலிருந்து எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்பக் கழகத்தின் திருச்சி வளாகத்தை காணொலி வாயிலாக இன்று (செப்.9) தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், " டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் அபாரமான செயல்திறன் நாட்டு மக்கள் அனைவரையும் பெருமையில் ஆழ்த்தியது.
19 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த நமது பாராலிம்பிக் வீரர்களின் விடாமுயற்சியை பாராட்டிய அவர், அவர்களது தலைசிறந்த செயல்திறன், மாற்றுத்திறன் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மட்டும் மாற்றவில்லை, விளையாட்டுத்துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக வளரும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏராளமான அவனி லேகராக்களும் நீரஜ் சோப்ராக்களும், வரிசையில் காத்திருக்கிறார்கள். ஒரு சிறப்பு சூழல் உருவாக்கப்பட்டால் அவர்களது திறமையை வெற்றிகரமாக வளர்க்க முடியும்.
எழுச்சியூட்டும் இந்தியா - தரமான கல்வி
கபடி, கொக்கோ போன்ற இந்திய பாரம்பரிய விளையாட்டுகளை மிகப்பெரிய அளவில் ஊக்கப்படுத்தி அவற்றை பல்கலைக்கழகங்கள் மீட்க வேண்டும். புதிய ஆற்றல் வாய்ந்த மற்றும் எழுச்சியூட்டும் இந்தியாவை உருவாக்குவதில் தரமான கல்வியின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய குடியரசு துணைத் தலைவர், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
வேகமாக மாறிவரும் உலகில், உளவியல், சமூக திறன்களின் அவசியத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், வாழ்க்கையை நோக்கிய நேர்மறை பார்வையை மாணவர்கள் வகுத்துக் கொள்ளவும், தேசிய கட்டமைப்பில் பங்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தங்களது கல்வியை பிறரது நலனுக்காகவும், சமுதாயம், நாட்டின் நன்மைக்காகவும் பயன்படுத்த, தொடர்ந்து கடுமையாக உழைக்குமாறு கூறினார்.
பாகுபாடு
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தை குறைக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். அறிவியல், தொழில்நுட்பம், சாமானிய மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். அது வாழ்க்கையின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.
கல்வித்துறையில் உள்ள ஊரக- நகர பாகுபாட்டை நீக்குவது குறித்துப் பேசிய அவர், மாணவர்களை மையமாகக் கொண்ட கற்பித்தல் மற்றும் கற்கும் அமைப்பு முறையில் சமூக ஆதரவின் அவசியத்தை சுட்டிக்காட்டினார். மாணவர்களிடையே தன்னார்வ தன்மை மற்றும் சமூக சேவை உணர்வை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோடநாடு விவகாரம் - முதலமைச்சர் Vs எதிர்க்கட்சி தலைவர்