சென்னை: விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக அதற்கான கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்து உள்ளார். சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது, "இது போன்ற தூய்மை பணியின் போது எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தனிமனித பொறுப்புடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன்.
சென்னை மாநகராட்சி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இது போன்ற பணிகளில் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடும் என நாம் ஒதுங்கிக் கொள்ளாமல் நமது பங்களிப்பையும் இதில் செலுத்தவேண்டும். மேலும் தமிழ்நாட்டில் அரசியலிலும், சமூகத்திலும் சினிமா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சமீப காலமாக நல்ல விதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சமூகத்தில் நல்லவிதமான உரையாடல்களை சினிமா ஏற்படுத்தி உள்ளது. ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியான பிறகு அந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசு செய்துள்ளது. விஜய் அரசியலில் வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகிறார்.
விஜய் மட்டுமல்ல அனைவருக்கும் அரசியலில் ஈடுபடுவதற்கு உரிமை உண்டு. விஜய் அரசியலுக்கு வரட்டும், ஆனால் முன்னதாக அதற்கான கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். அரசியல் என்பது அனைவருக்கும் சவாலானது தான், அந்த சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களே அரசியலுக்குள் வர விரும்புகிறார்கள்" என்று வெற்றி மாறன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வடக்கன்' படத்துக்காக தேவா பாடிய பாடல்.. படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்..!