சென்னை: 1983ஆம் ஆண்டு இந்திய வனப் பணிக்கு நேரடியாக தேர்வாகி தமிழ்நாடு வனத்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பதவிவகித்த வெங்கடாசலம், கடந்த 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற பின்னர் இவர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டார். தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கடாசலம், தனது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத 13 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுமார் 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.
வனத்துறையில் பணிபுரிந்து உயர் பதவிகளுக்கு சென்ற வெங்கடாசலம் மீது தற்போது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெங்கடாசலத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்த 15 கிலோ சந்தன மரக்கட்டைகளை சென்னை வனச்சரக அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். வனத்துறை சட்டத்தின்படி உரிய அனுமதி பெறாமல், சந்தனக்கட்டையை வைத்திருந்தால் அது குற்றமாகும்.
குறைந்தபட்சம் ஒருவர் ஐந்து கிலோ சந்தன மரத்தால் செய்யப்பட்ட கலை பொருட்களை வைப்பதற்கு மட்டுமே அனுமதி அளிக்கிறது இந்த சட்டம். அதற்கு மேல் உரிய அனுமதி பெறாமல் சந்தனக்கட்டை வைத்திருந்தால், அவர்கள் மீது தமிழ்நாடு வனத்துறை சட்டம், சந்தனமர பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சந்தன மரக்கட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருந்தால், அவர்களுக்கு அபராதம் விதித்து விசாரணை நடத்தவும் வனத்துறை சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் நடத்திய விசாரணையில், வெங்கடாசலம் சட்டவிரோதமாக சந்தன கட்டைகளை வைத்திருந்தது தெரிய வந்ததால், வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அமைச்சருடன் லிங்க்...லஞ்ச வேட்டையில் ஈடுபட்டவருக்கு ஆப்பு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்