தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பை தமிழர்களிடமிருந்து தட்டிப் பறிக்கும் வகையில் வடஇந்தியர்களை தமிழ்நாட்டில் மத்திய அரசு அனுமதிப்பதாகவும், மாநில அரசு அதற்கு துணை போவதாகவும் கூறி எல்.ஐ.சி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கம் சார்பில் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு வேலைகளில் தமிழர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். 2011 முதல் 2017 வரை மத்திய அரசின்கீழ் வரும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிறப்பு புலனாய்வு பிரிவுகளில் உள்ள 60 ஆயிரம் பணியிடங்களில், ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை. பிற மாநிலங்களில் இந்தத் தேர்வுகள் அந்தந்த மாநில தாய்மொழியில் நடத்தப்படும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் நடத்தப்படுவதே இதற்குக் காரணம்" என்று குற்றம் சாட்டினார்.
மேலும், "2006ஆம் ஆண்டுக்கு முன் வரை தமிழ்நாட்டில் காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்களுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் அது மாற்றியமைக்கப்பட்டதால் தமிழகர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. 2014ஆம் ஆண்டு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் தமிழில் உள்ளது என்பதாலேயே நிராகரிக்கப்பட்டன. ஆனால் பிற மாநிலங்களில் இருந்த இடத்திலிருந்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன" என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர், "யூ.பி.எஸ்.சி தேர்வில் தமிழர்கள் தேர்ச்சி பெற்று பணியாற்றிவரும் நிலையில் மத்திய அரசின் ரயில்வே துறை, அஞ்சல் துறை போன்ற துறைகளின் சாதாரண பணிக்கு புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ் மொழி தெரியாதவர்களை அரசு அலுவகங்களில் பணி அமர்த்தினால் அவர் எப்படி தமிழ் மக்களின் மொழியை புரிந்துகொண்டு அவர்களுக்கு சேவை புரிவார். இன்று எல்.ஐ.சியில் வெடித்த இந்த ஆர்ப்பாட்டம் நாளை ஆயக்கர் பவன், சாஸ்திரி பவன், இந்தியன் வங்கி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட இடங்களிலும் வெடிக்கும் என்பது உறுதி" என்று வேல்முருகன் தெரிவித்தார்.