சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வேலூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை வரும் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை 10 நாட்கள் முன்பாகவே முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகின்ற 20ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.