முன்னாள் முதலமைச்சார் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த 2017 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியது. தொடர்ந்து, நினைவில்லமாக ஆக்குவதற்கு இழப்பீடாக தமிழ்நாடு அரசு சார்பில் 68 கோடி ரூபாய் செலுத்தப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசுடமையானது. இதைத் தொடர்ந்து, இதற்காக சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் 3 கட்டங்களாக ஆய்வு செய்தனர்.
அப்போது, ஜெயலலிதா இல்லத்தை பொதுமக்கள் பார்க்கும் வகையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பது தொடர்பாக ஆய்வு செய்து அரசிடம் தெரிவித்தனர். அதன்பேரில், தற்போது ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியில் பொதுப்பணித் துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இதன் ஒருபகுதியாக ஜெயலலிதா வீடு முழுவதும் வர்ணம் அடிக்கப்படுகிறது. தொடர்ந்து, வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கெங்கு வைக்கலாம் என்பது தொடர்பாகவும் பட்டியிலிடப்பட்டுள்ளது.
அதில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், பரிசு பொருட்கள், புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், ஜெயலலிதா பூஜை அறைகளை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஜெயலலிதா இல்லத்தில் மார்பளவு கொண்ட சிலைகள் அமைக்கப்பட இருக்கின்றன.
இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை வரும் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட இருப்பதாகவும் வருகின்ற 27ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.