சென்னை: நாட்டின் 74ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுத்தார். இதில், பங்கேற்க பல கட்சிகளுக்கு அழைப்பு கொடுத்த நிலையில் திமுக, அதிமுக, பாஜக தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், சட்டப்பேரவை அதிமுக துணை கொறடா ரவி, ஆகியோரும் பாஜக சார்பியல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் பெற்றனர்.
மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பல்வேறு தூதரகங்களை சேர்ந்த அதிகாரிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பல்வேறு பத்ம விருதுகளை பெற்றவர்கள், கலைத்துறையில் உள்ளவர்கள் ஆகியோரும் பங்கேற்றனர். தமிழ்நாடு அமைச்சர்கள், எ.வ. வேலு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர்.
திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம், தமிழக வாழ்வுரிமை கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது. விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் முதலமைச்சர், ஆளுநர் அவரவர் இருக்கைக்கே சென்று வரவேற்று குடியரசு தின வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு கலாஷேத்திரா நடன கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. அக்குழுவினர் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை பாரதியார் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர். பின்னர், அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இன்று காலை குடியரசு தின விழாவில் சிறப்பாக கலை நிகழ்ச்சியில் பங்காற்றிய அசோக் நகர் அரசு பள்ளி மாணவிகள், ராணிமேரி கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
குடியரசு தினவிழாவில் சிறப்பான அணிவகுப்பு முதல் பரிசை, காவல் துறை பெற்றது. அதனை தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் பெற்றுக்கொண்டனர். இரண்டாம் பரிசை தீயணைப்புத்துறையும், மூன்றாம் பரிசை செய்தி மக்கள் தொடர்பு துறையும் வென்றன. கொடி தினம் நிதி வசூலுக்காக பரிசினை திருவள்ளூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்கள் பெற்றுக்கொண்டனர். அதிக நிதி வசூல் செய்த மாநகராட்சி அளவிலான பரிசினை சென்னை மற்றும் கோவை பெற்றது.
இதையும் படிங்க: குடியரசு தின விழா; 125 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கிய கவுன்சிலர்