இணையதள கருத்தரங்கு ஒன்றில் சனாதன தர்மம் குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ``சனாதன கொள்கைகளில், பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப் பெண்களுக்கும் தீட்டு உண்டு. சனாதன தர்மம் இதை சொல்கிறது" என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பேசும் பொருளானது. இதனைத் தொடர்ந்து மத ரீதியாக குறிப்பாக இந்து மதத்தை பற்றி இழிவாகவும், இந்து பெண்களை பற்றி இழிவாகவும் பேசும் விசிக தலைவர் திருமாவளவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து பதிவிட்டுனர்.
ஒருபுறம் திருமாவளவனின் கருத்திற்கு எதிர்ப்பு நிலவிவந்தபோதிலும், அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், எழுத்தாளர்களும் பதிவிட்டுவருகின்றனர்.
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து ட்விட் செய்துள்ளார். அதில், “திருமாவளவன் தீட்டிய அரிவாள்
தென்னவர் சுழற்றியதே - அவன்
அரிமா போலே ஆர்த்த கருத்தும்
அரிவையர் வாழ்வதற்கே – அதை
அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது
அரசியல் செய்வதற்கே – நாம்
நெறியின் வழியே நீண்டு நடப்பது
நீதி நிலைப்பதற்கே” எனப் பதிவிட்டுள்ளார்.