பேரறிஞர் அண்ணா இலட்சியக் கனவுகளை நனவாக்க 'சூளுரை நாள்' என்று மதிமுக சார்பாக வருடாவருடம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று(அக்.10) மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சூளுரை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் வைகோ சூளுரை வாசிக்க மதிமுக நிர்வாகிகள் அனைவரும் சூளுரை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவாவதற்கு காரணமான ஐந்து வீரத் தியாகிகளின் நினைவாக சூளுரை ஏற்கும் நாள் அனுசரிக்கப்பட்டது. மத்திய அரசு, மாநில கலாசாரத்தை ஒழிக்க மூர்க்கத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொல்லியல் துறையில் தமிழை சேர்க்காமல் அவமதித்த நிலையில், மத்திய அரசு மக்களின் பெரும் போராட்டத்தையடுத்து தற்போது தமிழ் மற்றும் தென்னக மொழியை சேர்த்திருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. மதிமுக சரியான பாதையில், திமுக தலைமையில் ஆட்சி அமைக்க உறுதி ஏற்றுள்ளோம். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெல்லும், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார். வருகின்ற தேர்தல் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும். மதிமுக தனிச் சின்னம் பெற்றுதான் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ”தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவியை அவமதிக்கும் விதமாக கீழே அமர வைத்த சம்பவம் கண்டனத்திற்குரியது. அவ்வாறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும், திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது, நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசின் டெண்டர்கள் ரத்து, அதிமுகவிற்கு கிடைத்த சம்மட்டி அடி - மு.க. ஸ்டாலின்