இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு இடங்களில் துப்புரவு, தோட்ட பராமரிப்பு, பிளம்பர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு 54 பேரை நியமனம் செய்ய செய்தி மக்கள் தொடர்புத்துறை தனியாரிடம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள இந்தப் பணிகளுக்கான நிபந்தனைகளை அந்த அறிவிப்பில் அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த கடிதங்கள், ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே இருக்க வேண்டும் என்றும், அவைகள் தமிழில் இருந்தால் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு மொழி பெயர்த்து அளிக்காத டெண்டர் ஆவணங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு இடங்களில் பணியாற்றுவதற்கான ஒப்பந்த ஆவணங்களில்கூட தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்படுகிறது என்பது வெட்கக்கேடாகும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள ஒப்பந்தத்திற்கான ஆவணம் தமிழ் மொழியில் இருந்தால் நிராகரிக்கப்படும் என அதிமுக அரசு குறிப்பிட்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இதற்கு தமிழக வாக்காளர்கள் கிளர்ந்து எழுந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.