சென்னை: இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், அக்டோபர் 10ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்சுற்று, 2ஆம் சுற்றுக் கலந்தாய்வுகள் நடைபெற்று நவம்பர் 16ஆம் தேதி வரையில் மாணவர்கள் சேர்ந்தனர். தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் 797 இடங்களில் 468 மாணவர்கள் சேர்ந்தனர். 349 இடங்கள் காலியாக இருந்தன. 2 அரசு பல்மருத்துவக் கல்லூரியில் 30 இடங்கள் உள்ளன. அதில் 3 பேர் மட்டுமே சேர்ந்தனர். 27 இடங்கள் காலியாக இருந்தன.
அதனைத்தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக இருந்து இடங்களுக்கான மாப்ஆப் கலந்தாய்வு நவம்பர் 28ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் டிசம்பர் 8ஆம் தேதி வரையில் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்த 817 இடங்களில் 689 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 128 இடங்கள் காலியாக உள்ளன. 2 அரசு பல்மருத்துவக் கல்லூரியில் 30 இடங்களில் 29 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஒரு இடம் காலியாகவுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு ஸ்டே வேகன்சி எனப்படும் 4ஆவது சுற்றுக் கலந்தாய்விற்கு, ஏற்கனவே மாப்ஆப் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படாத மாணவர்கள் கல்லூரியைத் தேர்வு செய்வதற்கு விருப்பம் தெரிவித்த இடங்களின் வரிசையின் அடிப்படையில் மாணவர்களுக்கு டிசம்பர் 14, 15ஆகிய தேதிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த மாணவர்கள் 17ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். நான்கு சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர் காலியாகவுள்ள இடங்களில் மாணவர்கள் யாரும் சேர முடியாமல் காலியாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தனியார் பள்ளிகள் வேறு மாநிலம் செல்லலாம்'