சென்னை: தமிழ்நாட்டில் 20 ஊராட்சிகளில் கடந்த ஆண்டு தேசியக்கொடியை சாதியப்பாகுப்பாட்டினால் ஏற்ற முடியாத நிலை இருந்தது எனவும், அந்த ஊராட்சிகளில் நடப்பாண்டிலும் தேசியக்கொடியை ஏற்றுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை எனவும்,
தேசியக்கொடியை சாதியப்பாகுப்பாட்டால் ஏற்ற முடியாத நிலை உருவாகும் ஊராட்சிகளில் மறுநாள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்தாலும் தேசியக்கொடியை ஏற்றும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அறிவித்துள்ளனர்.
பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றமுடியாத நிலை: இதுகுறித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறியதாவது, ”தமிழ்நாட்டில் கிராம ஊராட்சித்தலைவர்களில் சிலர் சாதியப் பாகுபாடுகளின் காரணமாக தேசியக்கொடியை ஏற்றிட முடியவில்லை. தலைவர்களில் சிலர் தரையில் அமர வைக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டப் பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் ஆங்காங்கே சாதிய ரீதியிலான சவால்களை எதிர்கொண்டனர்.
இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் எதிர் கொள்ளும் சாதிய ரீதியான சவால்கள் பற்றிய கள ஆய்வை மேற்கொண்டது. தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில், பயிற்சி அளிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு கள ஆய்வு நடைபெற்றது.
75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக்கொண்டாட இருக்கும் வேளையில் அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஊராட்சி அரசாங்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதித்தலைவர்கள் நிர்வாகம் செய்ய முடியாத அளவுக்கு சாதிரீதியான சவால்களை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 கிராம ஊராட்சிகளில் கடந்த ஆண்டு சுதந்திரத் தினத்தில் தேசியக்கொடியை பட்டிலினத்தைச்சார்ந்த தலைவர்கள் ஏற்ற முடியாத நிலைமை இருந்தது. ஆனால், அதேநிலைமை நடப்பாண்டிலும் ஏற்படக்கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பட்டியலினத்தலைவர் சுதா தேசியக்கொடியை ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளதாகப்புகார் அளித்தால், சின்னசேலம் வட்டாட்சியர் சமாதானக்கூட்டம் நடத்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் தேசியக் கொடியை ஏற்றுவார் என அறிவித்துள்ளார். அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும்.
தொடரும் சாதிய அவலங்கள்: மேலும், 42 ஊராட்சிகளில் பட்டியலினத்தலைவர் பெயரைக்கூட பெயர்ப்பலகையில் எழுதாமல் உள்ளனர். இதற்கு உரிய வட்டாட்சியர், ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலர்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எந்தவிதமிரட்டலோ, பாகுபாடோ இல்லாமல் தேசியக்கொடி ஏற்றுகிற ஜனநாயக உரிமையை உறுதி செய்திட வேண்டும்.
பெயர்ப்பலகை வைக்கப்படுவதையும் அதில் பெயர் எழுதி வைக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும். ஊராட்சி அலுவலகம் மற்றும் ஆவணங்கள் மீதான உரிமைகள் உறுதி செய்திட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் பயன்படுத்தும் முறைமைகள் குறித்தும் அவர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்தும் பயிற்சி அளித்திட வேண்டும். ஊராட்சி நிர்வாகம் செய்வதற்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிற அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
உரியதண்டனை பெற்றுத்தரப்படவேண்டும்: பெண்கள் என்ற முறையில் இழைக்கப்படும் பாகுபாடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தாக்குதல் நடத்துபவர் மீதும், இழிவாக பேசுவோர் மீதும், கட்டாயப்படுத்தி காசோலையில் கையெழுத்துப்போடச்செய்பவர் மீதும் காசோலை மற்றும் பதிவேடுகளை ஒப்படைக்காமல் இருப்பவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ள முழுமையான பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
இழைக்கப்படும் உரிமை மீறல்களையும், வன்முறைகளையும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச்சட்டத்தின்கீழ் பதிவுசெய்து, தவறிழைத்தோருக்கு உரியதண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும்.
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டினை உள்ளாட்சியில் உள்ள அனைத்து நிலை பதவிகளுக்கும் உறுதிசெய்திட வேண்டும். மேலும் வரும் சுதந்திரத்தினத்தன்று தேசியக்கொடியை பட்டியலினத்தைச்சேர்ந்தவர்கள் ஏற்ற முடியாத நிலையை அரசு மெளனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசினால் அமைக்கப்பட்டுள்ள எஸ்.சி, எஸ்டி ஆணையமும் இதுவரை எந்தவிதமான புகாரும் வரவில்லை எனக் கூறுகிறது.
இதுபோன்ற செயல்களில் தானாக வந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலினத்தைச்சேர்ந்த தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.