புதுச்சேரி: ஒரு நாள் பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் ’அமித் ஷா’ சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்தை வந்தடைந்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜக கட்சி நிர்வாகிகள் ஆகியோர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட அவர் ஈஸ்வரன் கோயில் வீதியிலுள்ள மகாகவி பாரதியார் இல்லத்திற்குச்சென்றார். அங்கு பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்ட அவர் தன் வருகையைப் பதிவு செய்தார்.
அதன்பிறகு அரவிந்தரின் ஆசிரமத்துக்குச்சென்றார். அங்கு உள்ள அரவிந்தர் சமாதி அன்னையின் சமாதிக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதனை முடித்துக்கொண்டு காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பல்கலைக்கழக கருத்தரங்கு அவையில் நடைபெற்ற ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் அவர் பங்கேற்றார். விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அரவிந்தரும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் என்ற புத்தகத்தினை அமித்ஷா வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், அரவிந்தரின் ஆன்மிக சேவை, சுதந்திரப் போராட்டப் பணிகள், குஜராத்தில் அரவிந்தர் ஆற்றிய பணிகள் குறித்து அமித்ஷா பாராட்டிப் பேசினார். ’தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால், ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துகளைப் படிக்க வேண்டும்’ என அவர் கூறினார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஸ்ரீஅரவிந்தரை தேசத்தின் இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். குஜராத்தில் ஸ்ரீஅரவிந்தரோடு நிறைய குஜராத்திகள் பணிபுரிந்ததை அமித் ஷா பெருமையாக நினைவு கூர்ந்தார். ஸ்ரீ அரவிந்தருக்கு 75 வயதாக இருந்தபோது, தேசம் சுதந்திரம் பெற்றது. அவரது 150ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் போது, தேசம் அதன் 75ஆவது சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
முன்னதாக விழாவிற்கு வந்த உள்துறை அமைச்சருக்கு தமிழ்ப்பாரம்பரிய மயிலாட்டம்,பொய்க்கால் குதிரையாட்டம் போன்றவை கொண்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.