செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரம் தொழிற்சாலைகளிலிருந்து கொண்டு வரும் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 5) மண்ணிவாக்கம் நெடுஞ்சாலை அருகே மருத்துவக் கழிவு குப்பைகளை அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோரம் கொட்டிவிட்டு அதனை எரித்து விட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து, தீ முழுவதும் பரவி மூன்று மணி நேரமாக கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுபோன்று மண்ணிவாக்கம் பகுதி சாலையோரங்களில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகளும், குப்பைகளும் கொட்டி எரித்து வருவதாக ஊராட்சி அலுவலர்களிடமும், காவல் துறையிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.