சென்னை: மதுரை மாவட்டம், கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர், ஆர்.பரிதி விக்னேஸ்வரன். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஜூடோ விளையாட்டில் தேசிய அளவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக மாநிலம், பெல்லாரியில் நடைபெற்ற தேசிய கேடட் ஜூடோ போட்டியில் (National Cadet Judo Championship) கலந்து கொண்டு ஐந்தாம் இடம் பெற்றார். மேலும், இவர் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் முதல் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இவர் கடந்த ஜுலை 26ஆம் தேதி அன்று மதுரையில் ஜூடோ பயிற்சிக்காக செல்லும்போது மின்கம்பம் விழுந்து விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் இந்த விபத்தினால், பரிதி விக்னேஸ்வரன் அவரது இடது காலில் ஒரு பகுதியை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று (செப்.19) மதுரைக்குச் சென்றிருந்த நிலையில், அமைச்சர் உதயநிதியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, விளையாட்டு வீரர் பரிதி அவரது அடுத்தகட்ட பயிற்சியை மேற்கொள்வதற்கும், வேலை வாய்ப்பிற்கு ஏதாவது உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரரை அமைச்சர் இன்று (செப்.20) நேரில் சந்தித்து, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சத்திற்கான நிதியுதவியினை வழங்கினார். மேலும், அவரால் இயன்ற உதவியை அவருக்கு (மாணவனுக்கு) செய்து கொடுப்பதாகவும் அமைச்சர் உதயநிதி உறுதியளித்துள்ளார். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி உடனிருந்தார்.
இதையும் படிங்க: சென்னை வேப்பேரியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை!