சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென்று சில மூத்த அமைச்சர்களும், சில அமைச்சர்கள் உதயநிதியைத் துணை முதலமைச்சராக வேண்டுமென்று தொடர்ந்து தீவிரமாகப் பேசி வரும் நிலையில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்து 7 மாதங்கள் நிலையில் உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கருத்துக் கேட்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது என மூத்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
மூத்த தலைவர் கோரிக்கை
மேலும், அமைச்சர்களில் உதயநிதி நண்பரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என் நேரு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் உதயநிதியை அமைச்சராகவோ அல்லது துணை முதல்வராகவோ நியமனம் செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே இன்று (டிச.18) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பேசினார். அவர் பேசும் பொது, "உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் எனச் சட்டப்பேரவையில் கூறியது நான் தான் எனத் தெரிவித்த அவர், அவரின் ஆர்வம், மக்கள் பணி பார்த்து ஆசையை வெளிப்படுத்தியதாகவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும்," எனவும் தெரிவித்தார்.
அடுத்த தலைவர்?
இது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், "திமுகவின் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டத் தொடங்கியுள்ளனர். இதே மாதிரிதான் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்" என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க: திருவல்லிக்கேணியின் செல்லப்பிள்ளை: 'தமிழகமே உதயநிதியை கொண்டாடும் நாள் வரும்'