சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சென்னைப் பள்ளிகளில் ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி எளிதாக கற்கும் முறையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 18 சென்னைப் பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைப்பட்டிகை ஆகிய ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்கள் ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயர் நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர் நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயர் நிலைப்பள்ளி மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் ஜப்பான் டிஜிட்டல் தொழில் நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் முறைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடங்கி வைக்கும் விதமாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்றுச்சாலையில் உள்ள சென்னை உயர் நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் தொழில்நுட்ப முறைகளை பள்ளிகளில் பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் முறை, மாணவர்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு, பொதுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை சுலபமாக மாணவர்கள் எதிர்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய ஒதுக்கீட்டில் நிரம்பாத மருத்துவ இடங்களை தமிழ்நாட்டிற்கு வழங்குக: அமைச்சர் மா.சு வலியுறுத்தல்