திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நேற்று நியமனம் செய்யப்பட்டார். தமிழக அரசியலில் தொடர்ந்து திமுக மீது வாரிசு அரசியல் விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில் உதயநிதி நியமனம் மேலும் அதை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது குறித்து உதயநிதியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'என் செயல்பாடு அதற்கான பதிலைத் தரும்' என கூறினார்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறுவுள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக இன்று முக்கிய நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கபடவுள்ளது. இந்த கூட்டத்திற்கு, தான் ஆர்வமாக இருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்வது குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.