சென்னை: பல்லாவரம் அடுத்த சென்ட்ரல் பாங்க் காலனி தேவராஜ் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர், எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர், வேலை முடித்து விட்டு கடந்த 19ஆம் தேதி இரவு நாகல்கேணியில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரது வீட்டின் அருகே 2 அடையாளம் தெரியாத நபர்கள் லோகேஷை வழிமறித்து பட்டா கத்தியை காட்டி மூன்று மணி நேரமாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும், அவர் வைத்திருந்த செல்போன், 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய இருசக்கர வாகனத்தை பிடுங்கி சென்றுள்ளனர்.
இது குறித்து சங்கர்நகர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த இடம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர்.
அதில், பம்மல் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (21), அவரது கூட்டாளி ஆஜஸ் (27) ஆகியோர்தான் வாகனம், மொபைலை வழிப்பறி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பல்லாவரம் காவல் துணை ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் இருவரையும் கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மது வாங்க பணம் இல்லாததால் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!