கடந்த 2013ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் வெடி மருந்துகளுடன் சிலரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தடா அஸ்லாம், டேனியல் பிரகாஷ், மான் சுலைமான், கிச்சன் புகாரி உள்ளிட்ட 19 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 19 பேரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். அப்போது 19 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். இதையடுத்து அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்ல காவல் துறையினர் தயார் நிலையிலிருந்தபோது, அவர்களைப் பார்க்க வந்த உறவினர்களுக்குப் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது கிச்சன் புகாரியை பார்க்க வந்த உறவினர்கள் சையது இப்ராகிம்(52), இம்ரான்(35), ஆகிய இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தபோது, ரகசியமாக ஒரு பென்டிரைவை (Pendrive) புகாரியிடம் கொடுத்தனர். இதனைக் கண்ட காவல் துறையினர் இரண்டு பேரையும் பிடித்து அவர்களிடமிருந்து பென்டிரைவை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்து பூந்தமல்லி காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இரண்டு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, எதற்காக பென்டிரைவ் கொடுத்தார்கள், என்ன காரணம் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.