சென்னை: நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. மேலும் 120 டெசிமலுக்கு மேல் சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கு விவரம்
இந்நிலையில் தமிழ்நாட்டில் நேற்று (நவ.4) அனுமதித்த நேரத்தை மீறி வெடி வெடித்ததாக இரண்டாயிரத்து 282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 517 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சென்னையில் மட்டும் அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகள் நடத்தியது தொடர்பாக 239 வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 269- உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரப்பக்கூடிய கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல், 286- உத்தரவை மீறி மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்தல், 290- பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்