செங்கல்பட்டு: சென்னை, காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீது தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கொலை வழக்கிலிருந்து ஜாமீன் பெற்று வெளிவந்த ரமேஷ், கடப்பாக்கம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து தினமும் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார்.
பழிக்குப் பழியா?
இந்நிலையில், கடந்த வாரம் வழக்கம்போல் காவல் நிலையம் செல்ல கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ரமேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக சூனாம்பேடு காவல் துறையினர் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, இன்று (செப்.15) கடப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற மீனவ இளைஞர், அடையாளம் தெரியாத நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கடந்த வாரம் கொலையான ரமேஷ் தங்கியிருந்த இடத்தை, எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்ததற்காக இந்தக் கொலை நடந்ததா என்று, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரே வாரத்தில், இரண்டு கொலைகள் நடந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இதையும் படிங்க: அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!