சென்னை மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், சொந்தமாக நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் பகுதி நேர கார் ஓட்டுநராக கார்த்திக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், மடிப்பாக்கத்தில் சொந்தமாகக் கட்டுமானத் தொழில் செய்ய விரும்புவதாகவும், கடனாக பணம் தருமாறு யுவராஜிடம் கார்த்திக் கேட்டுள்ளார். இதை நம்பி யுவராஜ் கொஞ்சம் கொஞ்சமாக 8 லட்சம் ரூபாய் வரை கடனளித்துள்ளார். அதன் பின்னர், பணத்தைப் பற்றி யுவராஜ் கேட்கும்போது கார்த்திக் சரியாகப் பதலளிக்காமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் காலம் தாழ்த்தியுள்ளார்.
இதுமட்டுமின்றி யுவராஜ் வீட்டிற்கு கார்த்திக் நண்பர் எனக் கூறிக்கொண்டு ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தான் ஒரு ரவுடிகள் கண்காணிப்பு காவலர் என்றும், கார்த்திக்கிடம் பணத்தைப் பற்றி இனி கேட்கக் கூடாது எனவும் மிரட்டிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, உடனடியாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் யுவராஜ் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், ரவுடியை போல் நடித்து ஏமாற்றிய ஓட்டேரியைச் சேர்ந்த ஜெய்சங்கர், கார்த்திக் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது!