சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பஜனை கோவில் தெருவில் வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் தங்கி கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு (அக்.25) இவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த விலையுயர்ந்த செல்ஃபோன்களைக் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் செல்ஃபோனை தர மறுத்ததால் இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு செல்ஃபோனை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், ஏற்கனவே சிறைக்குச் சென்று திரும்பியவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்கள் பம்மல் பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (20) ஸ்ரீராம் (26) என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் குடிப்பதற்கு கையில் பணம் இல்லாததால் செல்ஃபோன் கொள்ளையில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்து இரண்டு செல்ஃபோன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.