சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்புப் படை அலுவலர்களுக்கு ரயில்வே இ-டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக ரயில்வே பாதுகாப்பு படை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உதவி ஆணையர் ராஜூ, ஆய்வாளர் மீனா தலைமையிலான காவல் துறையினர் திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள மைக்ரோ டிராவல்ஸ் என்ற தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் ஆயிரத்து500 இ-டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கள்ளச்சந்தையில் ரயில்வே இ-டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் வினோதன், ஊழியர் ஹரிஹரன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1500 இ-டிக்கெட்டுகள், இரண்டு கணினி, இரண்டு செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்கள் இரண்டு பேரையும் ரயில்வே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று மாதங்களில் இது போன்று நாடு முழுவதும் கள்ளச்சந்தையில் இ-டிக்கெட்டுகள் விற்பனை செய்த சுமார் 50 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வேயை இ-டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயில்வே இணையதளத்தை ஹேக் செய்து இ-டிக்கெட் மோசடி செய்த கும்பல் கைது!