சென்னை: மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் சந்திப்பு அருகே பியர்ல் ஆப்டிகல் என்ற கண்ணாடி கடையில் பணிபுரிந்து வரும் பாண்டி லட்சுமி(23), என்ற பெண்ணிடம் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி பட்டப்பகலில் சுமார் 12.30 மணியளவில் கடைக்கு கண்ணாடி வாங்குவது போல் வந்த இருவர் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 1½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாண்டி லட்சுமி, மடிப்பாக்கம் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க பரங்கிமலை துணை ஆணையர் தீபக் சுவாச் தலைமையில் உதவி ஆய்வாளர் ஜோதி பிரகாஷ், தலைமை காவலர் நாராயணன், உலகநாதன், அசோக் குமார், சங்கர், முதல் நிலை காவலர் உமாபதி, காவலர் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.
இச்சம்பவம் நடந்த இடத்தில் ஆரம்பித்து செயின் பறிப்பு கொள்ளையர்கள் சென்ற இடமெல்லாம் சிசிடிவியை ஆராய்ந்து மேடவாக்கம் வரை 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். கடைசியாக அவர்கள் மேடவாக்கம் உணவகத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து சென்று காஞ்சிபுரம் தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
அந்த இரு இடங்களில் சேகரித்த தகவல்களை வைத்து, பின்னர் தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெங்களூர் விமான நிலையம் சென்றது தெரியவந்தது. அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திய அவர்கள் மத்திய பிரதேசத்திற்கு விமானம் மூலம் சென்றுள்ளனர். பின்னர் மும்பையில் இருந்து ரயில் மூலம் ஹைதராபாத் சென்று, அங்கிருந்து பெங்களூர் ரயில் நிலையம் சென்றுள்ளனர்.
இது போல் தொடர்ந்து, நகையை பறித்த வடமாநில கொள்ளை கும்பல் இருசக்கர வாகனத்திலும், விமானத்திலும், ரயிலிலும் மாறி மாறி சென்று தப்பித்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து மொத்தமாக சுமார் 1100 சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணித்து பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த நபர்களின் வீட்டையும் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து குற்றவாளி இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் மும்பையை சேர்ந்த குலாம்(51), சக்லென்(22) என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கண்ணாடி கடையில் இருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில், அவர்கள் மும்பையை சேர்ந்த ஈரானிய திருடர்கள் என்பதும், இதுவரை சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 9 இடங்களில் இதுபோல் திருடியிருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது அவர்களிடமிருந்து நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த மடிப்பாக்கம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.