டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வு 2017ஆம் ஆண்டு தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை சுமார் எட்டு லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வில் வெற்றிபெற்ற ஆயிரத்து 953 நபர்கள் அரசுப் பணியில் சேர்ந்தனர்.
இந்தத் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு டி.என்.பி.எஸ்.சி. குறித்து சமூக வலைதளங்களில் பரவிய இக்கருத்தைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ஒரே தேர்வு மையத்தில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்த 42 அரசு ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிசிஐடியிடம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை விசாரணை செய்து இதுதொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அலுவலராக தற்போது காவல் கண்காணிப்பாளர் மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் காவல் துணை காண்காணிப்பாளர் சிவனுபாண்டியனும் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் நபர்களிடம் விசாரணையை நடத்திவந்தது. இதனையடுத்து, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிவரும் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சுதாராணி, சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்துவரும் திருவிக நகரைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் இன்று சிபிசிஐடி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும் கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஏற்கனவே நேற்று குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வேல்முருகன், ஜெயராணி ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை குரூப்-4 தேர்வு முறைகேட்டில் 16 பேரும், குரூப்-2A தேர்வு முறைகேட்டில் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குரூப்-4 தேர்வு முறைகேடு; சிவகங்கை காவலர் சித்தாண்டி மீது வழக்குப்பதிவு