சென்னை பூக்கடை, பாரிமுனை உள்ளிட்டப் பகுதிகளில் தர்பூசணி பழத்தில் பீர் செய்து பொதுமக்களுக்கு விற்று வருவதாக பூக்கடை காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது முத்துசாமி பாலம் அருகே ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு நபர்களைப் பிடித்து, காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்டவர்கள் பல்லவன் சாலை காந்தி நகரைச் சேர்ந்த பூங்காவனம் என்றும்; 16 வயது சிறுவர் ஒருவர் என்றும் தெரியவந்துள்ளது. இதில் பூங்காவனம் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகின்றார்
அவர்களிடம் 5 கிலோ தர்பூசணிப் பழம், 2 கிலோ ஈஸ்டும் இருப்பதையடுத்து காவல் நிலையத்திற்கு காவலர்கள் அழைத்துச் சென்று இருவரையும் விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர்கள் கல்லறைப் பகுதியில் தர்பூசணி பழத்தை வைத்து, பீரை தயாரித்து, அருப்பு லட்சுமி என்ற பெண் மூலம் நைனியப்பன், திருமலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 வாரமாக விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பட்டியலின இளைஞனுடன் காதல்: மகளைக் கொன்ற தந்தை விடுதலை!