சென்னை: பெரவள்ளூரை சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைன் மூலம் அழகு சாதனப் பொருட்களை வாங்கி வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. தாங்கள் அழகு சாதனப் பொருட்களை வாங்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக எதிர்முனையில் பேசும் நபர் கூறியுள்ளார்.
தொடர்ந்து எங்கள் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கி வருவதால், பரிசளிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவர் என கூறியுள்ளார். முதல் பரிசு லேப்டாப், 2வது பரிசு ஐபோன், 3ம் பரிசு ஓவன், 4ம் பரிசு ஃபிரிட்ஜ், 5ம் பரிசு சோனி ஸ்மார்ட் டிவி என்றும் பட்டியலிட்டுள்ளார்.
மேலும் இதில் எந்த பரிசுப் பொருள் வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்யலாம் என்று கூறிய நபர், அதற்கேற்ப ஆன்லைன் ஷாப்பிங்கில் ரூ.5,027க்கு அழகு சாதனப் பொருட்கள் வாங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். இதை நம்பி, லேப்டாப் பரிசு வேண்டும் என கூறி, அந்த பெண் ரூ.5,027க்கு அழகு சாதன பொருட்களை வாங்கியுள்ளார்.
லேப்டாப் வேண்டுமென்றால் இன்சூரன்ஸ் பணமாக ரூ.15,490-ஐ செலுத்த வேண்டும் என்றும், அந்த பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் செல்போனில் பேசிய நபர் கூறியுள்ளார். அதை நம்பிய பெண், அந்த நபரின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு ரூ.15,490-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வரவில்லை, மீண்டும் கட்டுங்கள் என அந்த நபர் கூறியதால் மீண்டும் அதே தொகையை பெண் அனுப்பியுள்ளார். அப்போதும் பணம் வரவில்லை என அந்த நபர் கூறியதால், சந்தேகம் அடைந்த பெண், போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பெண் அனுப்பிய பணம் 3 வங்கிக்கணக்குகளுக்கு பரிவர்த்தனை ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த வங்கிக் கணக்குகள் தொடங்க பயன்படுத்தப்பட்ட இமெயில் முகவரி மூலம், மோசடி கும்பலை போலீசார் அடையாளம் கண்டனர். விசாரணையில் அவர்கள் மேற்குவங்க மாநிலம் வடக்கு பரக்பூரை சேர்ந்த பிபுல் மலாக்கர் (22), கவுஷிக் மண்டால் (22) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பல் "லக்கி ட்ரா" என ஆசை வார்த்தை கூறி, ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து வருவதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்த சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நபர் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உறவினருடன் செல்ல இளம்பெண் கிருத்திகா விருப்பம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி