சென்னை விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரபல தனியார் உணவகம் இயங்கிவருகிறது. இதனிடையே இந்த உணவகத்தில் நேற்றிரவு (ஜன.26) பணிகள் முடிவடைந்ததையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் உணவகத்தை மூடிவிட்டுச் சென்றனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் உணவகம் திறக்கப்பட்டு உள்ளே நுழைந்த பணியாளர்கள் உணவகத்தின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் உணவகத்தில் வைத்திருந்த இரண்டு லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக விமான நிலைய காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலைய காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எப்போதும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர், பாதுகாப்பு பணியில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் அளித்த உறுதி; போராட்டத்தைக் கைவிட்ட ராமதாஸ்! - போன் உரையாடலில் பேசியது என்ன?