சென்னையில் நடைபெற்ற மிகப்பெரிய ஜிஎஸ்டி மோசடியை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கண்டறிந்து, இது தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
776 கோடி ரூபாய் மதிப்பிலான போலி ரசீதுகளை வழங்கி 118 கோடி ரூபாய் மதிப்பிலான உள்ளீட்டு வரி கடன் மோசடி செய்ததற்காக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரையும், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரையும் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக விரிவான விசாரணை மற்றும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் சிக்கிய வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும், பொருளாதார குற்றங்களுக்கான சென்னை எழும்பூர் நீதிபதி முன்பு இன்று (டிச.04) ஆஜர்படுத்தப்பட்டனர்.
தங்களின் கூட்டாளிகளுடன் இணைந்து இவ்விருவரும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வேறு நபர்களின் பெயரில் ஜிஎஸ்டி பதிவை பெற்றுக்கொண்டு, ஆலோசகர்கள் என்னும் போர்வையில் வரி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலியான நிறுவனங்களை ஆரம்பித்து அவற்றின் மூலம் சரக்குகள் அல்லது சேவைகளை வழங்காமலேயே பல்வேறு நிறுவனங்களுக்கு போலி ரசீதுகள் வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் மூலம் லாபம் அடைந்துள்ளவர்களையும் கண்டறிந்துள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை, வரி கணக்காளர்கள் யாராவது இவர்களை வழி நடத்தினார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை சென்னை (வெளிப்புறம்) கூடுதல் ஆணையர் திருமிகு மானசா கங்கோத்ரி கட்டா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரித்துறை சோதனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஜிஎஸ்டி முறைகேடு கண்டுபிடிப்பு!