சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மைத்துனர் ராஜசேகருடன் ஒன்றாக வசித்துவருகிறார். மேலும், ராஜசேகரின் தாய் லதா (47) தன் இரண்டாவது கணவர் முகேஷ் என்பவருடன் ரெட்டேரி பகுதியில் வசித்துவந்துள்ளார்.
கடந்த 5ஆம் தேதி முகேஷ், லதாவை அடித்ததால் கோபித்துகொண்டு அவரது மகன் ராஜசேகர் வீட்டிற்கு வந்து மூன்று நாள்கள் தங்கியுள்ளார். பின்னர், வில்லிவாக்கத்தில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு லதா சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு முகேஷ் தனது நண்பர் கவுதம், சிலருடன் ராஜசேகர் வீட்டிற்கு தன் மனைவி லதாவை அழைக்கச் சென்றுள்ளார். அப்போது, லதா அங்கில்லாததால் வீட்டிலிருந்த மணிகண்டனை காரில் ஏற்றிக்கொண்டு லதா தங்கியுள்ள இடத்தை காட்டச்சொல்லி தாக்கியுள்ளனர்.
அவர்கள் சென்ற காரை மறித்த இரவு நேர ரோந்துப் பணியிலிருந்த உதவி ஆய்வாளர், உள்ளே இருந்த மணிகண்டன், அவரைத் தாக்கிய கவுதம் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தனர். காரில் இருந்த மற்றவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அயனாவரம் காவல் துறையினர் கவுதமிடம் விசாரணை செய்ததில், அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய நபர்கள் குறித்தும் அவரிடம் விசாரித்துவருகிறனர்.
இதையும் படிங்க : சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 8 பேர் மீது போக்சோ!