தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி கடற்கரை பகுதியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் இரண்டு வாகனங்களில் கொண்டு வந்த பொருள்களை படகில் சிலர் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த காவல் துறையினரை கண்டதும் பொருள்களை படகில் ஏற்றி கொண்டிருந்த நபர்கள் கடலில் குதித்து தலைமறைவாகி விட்டனர்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 2.500 கிலோ விரலி மஞ்சள், 1.500 கிலோ பீடி இலை, 150 கிலோ வெங்காய விதையை தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள், பதிவுசெய்யப்பட்ட பைபர் படகினையும் பறிமுதல்செய்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.