டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை எதிர்கொண்டு சமாளித்து உரிய சிகிச்சை வசதிகளை அளிக்கவேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியின் நிர்வாகத் திறமையின்மையால் திணறி வருவதும், அதன் காரணமாக நோயாளிகள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதும் வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்கும் உரியதாகும்.
கரோனா நோய்த்தொற்றிலிருந்து சென்னையைக் காப்பாற்ற திட்டங்களை வைத்திருக்கிறார். ஒவ்வொன்றாக அமல்படுத்தி நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவோம் என்று முதலமைச்சர் பழனிசாமியும், சுகாதார அமைச்சரும், அலுவலர்களும் வீரவசனம் பேசி பாடல்கள் கொடுக்கிறார்களே தவிர அதைச் செயலில் காட்டுவதாகத் தெரியவில்லை.
மே 31ஆம் தேதி வரை சென்னை மாநகரப் பகுதிகளில் மட்டும் 14 ஆயிரத்து 802 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 129 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்நோயால் பாதிக்கப்படு 66 சதவீதம் பேர் சென்னைவாசிகள். மரணமடைபவர்களில் நான்கில் ஒருவர் சென்னைவாசி.
நோயைக் கட்டுக்குள் வைக்க தமிழ்நாடு அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இறப்பு விகிதம் குறைவு என்று நாள்தோறும் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர். தமிழ்நாட்டில் இதுவரை 173 உயிர்களை இந்நோய்க்காகப்பலிகொடுத்துவிட்டு இப்படி பெருமைப்பட்டுக் கொள்வது மனிதத்தன்மையுள்ள செயல்தானா? தமிழ்நாட்டில் ஒரு உயிரைக்கூட கரோனாவுக்காகப் பலியாக விடமாட்டோம் என்று வசனம் பேசியதெல்லாம் என்னவாயிற்று?
சென்னையிலுள்ள பெரிய அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் 300 முதல் 600 நோயாளிகள் வரை மட்டுமே சிகிச்சை அளிக்க படுக்கை வசதி உள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் சுமார் ஏழாயிரம் பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இனி வரப்போகும் நோயாளிகளுக்கு அரசு என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது?
கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அரசு மருத்துவமனைகள் நிரம்பிவழிவதாகச் செய்திகள் வருகின்றன. எனவேதான் ஏதேதோ காரணங்களைச் சொல்லி நோயாளிகள் அலைக் கழிக்கப்படுகிறார்கள்.
நோயாளிகள் எண்ணிக்கை அதிகமானால் ஏற்படும் சங்கடங்களை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஜூன், ஜூலை மாதங்களில்தான் இந்நோயின் தாக்கம் உச்சத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தமிழ்நாடு அரசு நினைவில் வைத்திருந்தால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்நேரம் எடுத்திருப்பார்கள்.
சென்னையிலுள்ள திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளில் உள்ள அரங்கங்களை மாநகராட்சி கைப்பற்றி பல வாரங்கள் ஆகிவிட்டது. அதில் குறைந்தபட்சம் படுக்கை வசதியை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கும் ஏற்பாடுகளை இதுவரை செய்யவில்லையே ஏன்?
நோய் பரவத் தொடங்கிய காலங்களில் அரசு தினசரி வெளியிடும் மருத்துவ குறிப்பு, எவ்வளவு படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று சொல்லிவந்தார்கள். கடந்த பல வாரங்களாக அந்த விவரத்தைச் சொல்வதையே தவிர்ப்பதன் காரணம் என்ன?
பழனிசாமி அரசின் இந்த செயலற்ற தன்மையால் நொந்துபோய் தனியார் மருத்துவமனைகளை நாடுபவர்களுக்கு அங்கேயும் அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.
பல தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்குக் குறைந்தது 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கட்டணம் வசூலித்து ஒரு பகல்கொள்ளையே நடத்துகின்றன. அதைத்தடுக்க வேண்டிய மாநில அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.
பேரிடர் கால சட்டத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சைக்குப் பெறவேண்டிய கட்டண வரம்பை ஆந்திரா போன்ற மாநிலங்கள் நிர்ணயித்திருக்கும்போது, தமிழ்நாடு அரசு அதைச் செய்யத் தயங்குவதன் மர்மம் என்ன?
நோய்த் தொற்று அதிகரித்து வருவதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகளை இனிமேலாவது அரசு செய்ய வேண்டும். சென்னை மாநகரில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும்
நபர்கள் எந்தெந்தப் பகுதிகளில் சிகிச்சைபெற எவ்வளவு வசதிகள் உள்ளது என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அமெரிக்கா இனப்பாகுபாடு காட்டுகிறது - சீனா குற்றச்சாட்டு