சென்னை எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் என்பது அரசியல் ஆதாயத்திற்கு அமைக்கப்பட்டது. மக்கள் வரிப்பணம் வீணாகியுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கை என்று தான் வரமுடியும். உண்மையான நிலை அதுதான்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மின்வெட்டுக்கு நிலக்கரி தட்டுப்பாடு மத்திய தொகுப்பில் வரவில்லை என கூறுகிறார்கள். இதுபோன்ற பதில் கூறுவதற்கு திமுகவிற்கு ஆட்சியைப் பொறுப்பை மக்கள் தரவில்லை. தட்டுப்பாட்டை முன்னரே தெரிந்து அதை மாற்ற வழியை ஏற்பாடு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் மின்வெட்டு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்" என கூறினார்.
மேலும், அண்ணா சொன்னது போல் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என கூறியதை உண்மை என்பது போல் தமிழ்நாடு ஆளுநர் நிரூபித்து வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானத்தை ஆளுநர் குடியரசு தலைவருக்கு காலம் தாழ்த்தாமல் அனுப்ப வேண்டும் என்பதே அவரின் கடமை. ஆளுநர் முதலமைச்சருடன் சண்டையிட்டு தமிழ்நாடு மக்கள் நலனில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார்கள்.
CAA வருவதற்கு காரணமே திமுக தான். தற்போது CAAவிற்கு எதிராக தீர்மானம் போட்டதாக கூறுகின்றனர். ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை திமுக நிறுத்தினால் மக்கள் மத்தியில் திமுக மறைந்து போகும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை தேவையில்லாமல் அமைத்தற்கு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்ற அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறிய கருத்து சரிதான்" என கூறினார்.