தமிழ்நாடு முழுவதும் தண்ணீர், நீர் மோர் பந்தல்கள் அமைத்திடக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் கொளுத்துகிறது. இன்னும் போகப்போக வெயிலின் தாக்கம் அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நேரத்தில் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற ஜெயலலிதா அவர்களின் வழியில் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பந்தல்களையும், நீர் மோர்ப் பந்தல்களையும் திறந்திட வேண்டுகிறேன்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதியில் இருக்கும் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணி, பாதசாரிகளுக்கும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்குத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப் பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிப்பதிலும் உரிய கவனம் செலுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் நடைமுறைக்கு வரும் கரோனா கட்டுப்பாடுகள்