சென்னை: குடும்ப சொத்தில் சமபங்கு வழங்கக் கோரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவியும், மகளும் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்து வாரிசுரிமை சட்டப்படி, ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு பெற உரிமையுள்ளதாக கூறி, இரு பெண்களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று(மார்ச்.8) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படாததால், இந்த சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்க மறுக்கும் வகையில் எந்த மரபும், நடைமுறையும் நிரூபிக்கப்படாததால், இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், நடைமுறை, மரபு பின்பற்றப்படாத நிலையில் பழங்குடியின பெண்களுக்கு குடும்ப சொத்தில் பங்கு கிடைக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சம பங்கு பெறும் உரிமை மறுக்கப்படுவது வருத்தத்துக்குரியது என தெரிவித்தார்.
பழங்குடியின பெண்கள் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் வகையில் மத்திய அரசு மூலம் அறிவிப்பு வெளியிடச் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1937ஆம் ஆண்டு இந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது 1956ஆம் ஆண்டில் இந்து வாரிசுச் சட்டம் என்றும், 2005ஆம் ஆண்டில் இந்து வாரிசு திருத்தச் சட்டம் என்றும் சீர்திருத்தம் செய்யப்பட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என திருத்தம் செய்யப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் தந்தை உயிரோடு இருந்தால் மட்டுமே மகள்கள் சொத்தில் பங்கு பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
அதன்படி, சொத்தின் உரிமையாளர் 2005ஆம் ஆண்டுக்கு முன்னதாக இறந்திருந்தாலும், பிறப்புரிமையின் அடிப்படையில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு தெரிவிக்கப்பட்டது.
அம்பேத்கர், பெரியார், கருணாநிதி போன்ற தலைவர்களின் முயற்சியால் பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தாலும், இன்றளவும் பழங்குடியின பெண்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு நிறைவு.. இரண்டு வாரத்தில் அறிக்கை.. காவல் துறை தகவல்..