சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை, சிறப்பு ஆசிரியர்கள், கணிப்பொறி ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அதிகாரிகள், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் உயர் கல்வித்துறையில் இளநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து அளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB Annual Recruitment Planner) தனது ஆண்டு திட்டத்தை வெளியிடுகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டில் 4989 இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வும், அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 1334 உதவி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பல்டெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியில் 493 இடங்களும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதற்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்டத்தில் அரசுக்கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிவிப்பின் போது விண்ணப்பம் செய்தவர்கள் தற்பொழுது விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் உயர் கல்வித்துறை கூறியுள்ளது.
அதைத் தொடர்ந்து தற்போது இவர்களுக்குப் போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆனால் அதற்கான எந்த அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. மேலும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் 23 பேரை நியமனம் செய்வதற்குப் பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடைநிலை ஆசிரியர் பணியில் 6553 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், பட்டதாரி ஆசிரியர் பணியில் 3587 பேர் நியமனம் செய்வதற்கு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட புதிய பதவிகள் நிரப்பப்பட்டு உள்ளது. உள்ளது. தேர்வர்களுக்கான எந்த விதமான அறிவிப்பும் இதுவரை வரவில்லை. இதனால் படித்த இளைஞர்கள் அரசுப்பணிக்கான கனவுடன் காத்திருக்கின்றனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தங்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தக்கூடாது எனவும், அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.