சென்னை: முதலமைச்சரின் ஆராய்ச்சி கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் 120 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான போட்டி எழுத்துத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. கலை மற்றும் சமூக அறிவியல் பாடப் பிரிவுகள் சார்ந்து நூறு பேருக்கும், அறிவியல் பாடப் பிரிவு சார்ந்து நூறு பேருக்கும் என 200 பேருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் இதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கலை, மனிதவளம், சமூக அறிவியல் ஆகியப் பிரிவுகளில் தலா 60 மாணவர்கள் வீதமும், அறிவியல் பிரிவில் 60 மாணவர்கள் என 120 பேருக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளது.
முதலமைச்சரின் ஆராய்சி உதவித்தொகையை பெறுவதற்கு அக்டோபர் 20-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரையில் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு டிசம்பர் 10- ஆம் தேதி நடைபெறும். தமிழ்நாட்டை இருப்பிடமாக கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பினை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே மாதத்தில் 40 பேரை பலி வாங்கிய பட்டாசு வெடி விபத்துகள்.. நடந்தது என்ன?