தமிழ்நாடு போக்குவரத்துத்துறையின் கீழுள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி பழைய ஒப்பந்தத்தின் காலம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.
புதிய ஊதிய ஒப்பந்தப்பேச்சுவார்த்தை கரோனா தொற்றுப் பரவல் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து அண்மையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதியப் பேச்சுவார்த்தை இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இருப்பினும் இதில் இறுதி முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வரும் பிப்.25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட சிஐடியூ, ஏஐடியூசி, தொமுச உள்ளிட்ட ஒன்பது போக்குவரத்துக் கழகங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றாலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற பல நாள்களாகத் தொடர்ந்து போராடி வருவதாகவும், இதனைத் தவிர தற்போது வேறு வழியில்லாததால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிஐடியூ பொதுச்செயலாளர் தயாநந்தன் கூறுகையில், “போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கம் ஏதுமின்றி சேவை மனப்பான்மையுடனே இயக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்காமல் ஊழியர்களின் சேமிப்புப் பணத்தை வைத்து சேவையை நடத்தி வருகிறது.
மேலும், ஊழியர்களின் 8 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பயன்படுத்துவதால் ஓய்வு பெறும் ஊழியர்களுக்குப் பணப்பலன்களை உரிய நேரத்தில் வழங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு மற்றதுறை ஊழியர்களைவிட குறைவான நிதியே வழங்கப்படும் நடைமுறையையும் மாற்றியமைக்க வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
இதுதொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் அளித்துவிட்டு, அதனை இதுவரை நிறைவேற்றவில்லை.
தமிழ்நாடு அரசு ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதால் வரும் பிப்.25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தற்போது தேர்தல் நெருங்குவதால் இந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகாண மேலும் அதிக காலம் ஆகலாம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!