சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ராஜகண்ணப்பன் போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து அலுவலர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த ராஜகண்ணப்பன், "பொங்கலை முன்னிட்டு சென்னையில் ஐந்து சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதிவரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
16,709 சிறப்புப் பேருந்துகள்
மாதவரம் பேருந்து நிலையம், கே.கே. நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் சிறப்புப் பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக ஜனவரி 16ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதிவரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும் முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படும்.
புகார் தெரிவிப்பதற்கு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட உள்ளது. இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பேருந்துகள் இயக்கம் குறித்துத் தெரிந்துகொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 94450 14 450, 94450 14436, ஆகிய தொலைபேசி எண்களில் 24 மணிநேரமும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044 2474 9002 என ஆகிய எண்களில் ஆம்னி பேருந்துகள் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம்.
கடுமையான நடவடிக்கை
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் செல்வதற்கு ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக இணைப்புப் பேருந்தில் இருபத்து நான்கு மணி நேரமும் செயல்பட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
வெளியூர் பயண வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள் பயணிகளுக்குத் தரமற்ற உணவுகள் வழங்கினாலும் அதிக விலைக்கு உணவுகளை விற்றாலும் உணவகங்களின் டெண்டர் ரத்துசெய்யப்படும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், போக்குவரத்து அலுவலர்கள் உணவகங்களில் உணவுகளின் தரம் குறித்துத் தொடர்ந்து சோதனை மேற்கொள்வார்கள். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் எண்களில் புகார் தெரிவிக்கலாம். அரசு தெரிவித்துள்ள அனைத்து விதிமுறைகளும் பேருந்துகளில் பின்பற்றப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கிராமப்புறங்களுக்குச் சென்று சேவையாற்றுகள் - ஸ்டாலின் கோரிக்கை